பூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி!

கிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி பிரதேச சபையின் அனுமதியில்லாது இந்தக் கட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு, வர்த்தக அமைச்சரிடம் வாய்மூல விடைக்கான வினாக்களை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் தொடர்பிலும், கரைச்சிப் பிரதேச சபையின் அனுமதியின்றி எவ்வாறு அந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது என்பது பற்றியும் சிறிதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இந்தக் கட்டடம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று இதன்போது பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, விரைவில் தான் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையால், அதன்போது கவனம் செலுத்துவார் எனவும் கூறினார்.

மேலும் கரைச்சி பிரதேச சபையினூடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றது. மக்களுக்கு நன்மையளிக்கும் அபிவிருத்தித் திட்டங்களை கூட்டமைப்பு எதிர்த்து வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரின் பதிலால் கோபமடைந்த சிறிதரன் எம்.பி., “பூசி முழுகாமல் நேராகப் பதிலைக் கூறுங்கள். போருக்குப் பின்னர் இந்தக் காணியை அடாத்தாக அரசு பிடித்துக்கொண்டுள்ளது.

கூட்டமைப்பு அபிவிருத்திக்கு எதிரானதல்ல. காட்டுச் சட்டத்தைக் கொண்டு அடாத்தாக இந்தக் கட்டடத்துக்கான காணி பிடிக்கப்பட்டுள்ளது.

இது சரியா என்பதே எனது கேள்வி. இதற்குப் பதிலளிக்காது பூசி முழுகுவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

மாட்டை பற்றி கேள்வி கேட்டால் மாட்டை தென்னையில கட்டிவிட்டு தென்னையை பற்றி கதை சொல்லக்கூடாது: சபையில் சிறீதரன் எம்.பி! இன்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் ஒரு அரசு தரப்பு அரசியல் பிரமுகர் ஒருவருக்காக அடாத்தாக பிடிக்கப்பட்ட கிளிநொச்சி சதோச காணி விவகாரம் தொடர்பாக சிறீதரன் எம்.பி அவர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் சம்பந்தமில்லாத மழுப்பல் பதிலை கூறிய போது ஏற்பட்ட விவாதம்…#Parliament #ShritharanMP #Shritharan #Tamil #MP

Publiée par Shritharan Sivagnanam sur Mardi 22 septembre 2020