எம்மை தலைவர்களாகவோ மேதைகளாகவோ காட்ட மாவீரர் தின நிகழ்வுகளை நாம் முன்னெடுக்கவில்லை

தமிழர்களின் விடுதலைக்காக இறுதி வரை போராடி வீரச்சாவை தழுவிக் கொண்டு மாவீரர்களை நினைவுகூரும் தகுதி ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு.

மாவீரர்நாளை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் சர்வதேச சமூகத்திடமும் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிர் இழந்தவர்களை உறவினர்கள் நினைவுகூருவதற்கு தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நல்லாட்சி அரசு சார்பில் அயல் உறவு அமைச்சர் மங்களசமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.

தங்களை தமிழ்த் தலைவர்களாகவோ அல்லது மேதைகளாகவோ வெளிப்படுப்படுத்திக் கொள்ளவதற்காக மாவீரர் தின நிகழ்வுகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை.

மக்களுக்கு நாங்கள் வழங்கியுள்ள சத்தியத்தின் அடிப்படையிலும் மக்கள் எமக்கு தந்துள்ள ஆணையின் அடிப்படையிலும் தலைமைத்துவ வழிகாட்டலை செய்வது எமது பொறுப்பாகும்.

மாவீரர்களை கௌரவப்படுத்தி தமிழர்களின் போரட்ட வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு கையளித்து வரும் காலத்தில் நிகழ்வுகள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவும் கூட்டமைப்பு தனது பணியை செய்திருக்கிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என எமது தலைவர் சம்பந்தனும் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

ஜனாதிபதியும் பிரதமரும் எமது கோரிக்கைக்கு பச்சை கொடி காட்டாது விட்டாலும் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கவில்லை அச்சுறுத்தல்களும் விடப்படவில்லை.

இதனால் மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றி தமது பிள்ளைகளை உறவினர்கள் அஞ்சலிக்க முடிந்தது இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டதை சிங்கள கற்று அறிந்தோர் மற்றும் சிங்கள நற்சிந்தனையாளர்கள் கூட வரவேற்று இருந்தனர்.

இனிவரும் காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சீர் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கு நல்லாட்சி அரசு வழிவகை செய்யும் என கூட்டமைப்பு நம்புகிறது என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.