மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம்

கிளிநெச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கரந்தாய் கிராமத்தில் வாழ்ந்து வந்த முப்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தென்னை அபிவிருத்திச்சபையின் ஆக்கிரமிப்பு காரணமாக வெளியேற்றப்பட்டமை குறித்து ஜனாதிபதிக்கு  கடிதம் மூலம் தெளிவுபடுத்தியுள்ளேன்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 40 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்களை 2010 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச்சபை இராணுவ ஆக்கிரமிப்புப் பாணியில் அவர்களின் வீடுகளையும் கிணறுகளையும் கனரக வாகனங்களால் இடித்துத் தள்ளியவாறு அவர்களது காணிகளுக்குள் புகுந்து குடும்பங்களை தெருவில் தள்ளிவிட்டு சமையல் பாத்திரங்களையும் அராஜகமான முறையில் தூக்கியெறிந்து நடந்து கொண்டனர்.

இது தொடர்பில் 11.06.2016 இல் நடைபெற்ற ஒருங்கிணைப்புப் பொதுக்கூட்டத்தில் அனைத்து இணைத் தலைவர்களும் எடுத்த ஏகமனதான தீர்மானம் அரசாங்க அதிபர், பிரதேச செயலர் ஆகியோரின் பரிந்துரைகள் என்பன உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சர் இது தொடர்பில் வழங்கிய பணிப்புரை 09.07.2015ஆந் திகதி காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் அறிவுறுத்தல் என்பன தென்னை அபிவிருத்திச் சபையினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமக்கு இருக்கின்ற அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வதும் பொலிஸாரின் துணை கொண்டு மக்களை வெளியேற்றுவதுமாக தென்னை அபிவிருத்திச் சபை மனிதாபிமானமற்றுச் செயற்பட்டு வருகிறது.

காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்களை ஒரு அரச நிறுவனம் துன்புறுத்தி வெளியேற்றுவது மாத்திரமன்றி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு என்பவற்றின் முடிவுகளை நல்லாட்சியின் கீழ் மீறுவது வேதனை தருகிறது. ஆகவே இது தொடர்பில் விரைந்து தீர்மானம் எடுக்குமாறு அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.