செந்தில்குமரன் ஈழத்தின் உறவுகளின் வாழ்விற்காக எந்நேரமும் தனதுபணிகளை சளைக்காமல் ஆற்றிவருபவர்:சிறீதரன்

21

வடமராட்சிக் கிழக்கு பிரதேசம் கணினித்துறையிலே பல்வேறுபட்ட வளர்ச்சிகள் இன்னும் சரியான இலக்கை அடையாமலிருந்த காரணத்தால் இந்த கோரிக்கையை அவரிடம் நான் வைத்தபோது கனடாவில் இருக்கும் திருவாளர் செந்தில்குமரன் தன்னுடைய கடும் முயற்சியால் அந்நாட்டினுடைய பெயரிலே கணினி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள கனடா செந்தில்குமரனின் நிவாரணம் ஊடான கணினிக் கற்கை நிலையத்தில் அடிப்படை கணினிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மேற்படிதெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

செந்தில்குமரன் இதுமட்டுமல்ல பல்வேறு விதமான பணிகளை கனடா நாட்டிலேயிருந்து ஆற்றி வருகின்ற ஒரு நல் மனிதன்.

விடுதலைப்புலிகள் இம்மண்ணிலே இருந்த போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மக்களின் வீட்டுத்திட்டத்திற்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை ஆற்றிவந்த பெரு மனிதனாக செந்தில்குமரன் திகழ்ந்து வந்தார்.

யுத்தமௌனிப்பிற்குப் பின்னர் கூட தன்னுடைய மின்னல் இசைக்குழுவின் ஊடாக பல இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து கனடாவினுடைய பல பிரதேசங்களிலே இந்த இசை நிகழ்ச்சிகளை நடாத்தினார்.

அதன் ஊடாக அங்குள்ளவர்களிடம் சேகரிக்கின்ற பணத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதனை விட, இதய ரீதியாக நோய் வாய்ப்பட்டவர்கள் விசேட தேவையுடைய பிள்ளைகள், கண் பார்வையற்றோருக்கான சத்திர சிகிச்சைக்கான உதவிகள் இவ்வாறாக பலபாரிய பணிகளை ஆற்றிவருகின்றார்.

அதற்காக இரவு பகல் பாராது தன்னுடைய பணிகளை சளைக்காமல் ஆற்றிவருகின்ற நல்ல மனிதன். அநேகமாக அவர் தன்னுடைய கச்சேரிகளிலே ஒரு இரந்து கேட்பது போல முழங்கால்களில் இருந்து பாடல் பாடி ஈழத்திலே வாழ்கின்ற தனது மக்களுக்காக உயரிய பணியை ஆற்றி வருகின்ற வல்வெட்டித்துறை மண்ணைச் சார்ந்த ஒருவர் தான் செந்தில்குமரன்.

அந்த அன்பான உள்ளத்தினுடைய தேவை அவர் இந்த மண்ணிலே ஆற்றி வருகின்ற பணி. அவருக்குத் துணையாக அவரது துணைவியார் அவரோடு இணைந்து செயற்படுகின்றார்கள்.

கனடாவில் இருக்கின்ற பல்வேறுபட்ட மனிதர்களையும் தன்னோடு இணைத்து அந்த இணைப்பின் ஒரு பாலமாகத் தான் இந்த வடமராட்சிக் கிழக்கிலே கனடா கணினிக் கற்றல் நிலையம் இருக்கிறது.

அதனூடாக இந்த பிள்ளைகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஊக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். அதனடிப்படையில் தான் இப் பயிற்சிநிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பல முன்னேற்றங்களைக் கொண்டிருக்கின்றது. 80 பிள்ளைகள் பயிற்சி சான்றிதழைப் பெறுகின்றார்கள் என்றால் இது ஒரு அடையாளமாக இருக்கின்றது.

செந்தில்குமரனுடைய கனவு அவரது செந்தில்குமரன் நிவாரணநிதியத்தினூடாக நனவாகியிருக்கின்றது.

அது மென்மேலும் வளர நாங்கள் எல்லோரும் இணைந்து அவரோடு செயற்படுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வு மருதங்கேணி வடமராட்சிக் கிழக்கு பிரதேசசெயலர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்குமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராசா, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான தர் மலிங்கம், சு.பசுபதிப்பிள்ளை கௌரவ விருந்தினராக மருதங்கேணிகோட்டக் கல்வி அதிகாரி ச.திரவியராயா மற்றும் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் சுதர்சன்,

வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக நிர்வாககிராம அலுவலர் மு.தவராசா, வைத்தியர் சிவநேசன்,நெய்தல் கல்வி அபிவிருத்தி நிறுவனத் தலைவர் க. சூரியகாந்,கிராம அலுவலர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகமட்டபிரதிநிதிகள்,மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
DSC_0031

DSC_0033

DSC_0040

DSC_0041

DSC_0042

DSC_0043

DSC_0044

DSC_0045

DSC_0050

DSC_0055

DSC_0056

DSC_0059

DSC_0061

DSC_0064

DSC_0067

DSC_0069