கேப்பாப்புலவு மக்களின் காணி மீட்பு தொடர்பில் சம்பந்தன் பேச்சுவார்தை! மக்களது போராட்டம் நியாயமானது

23

கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சமபந்தன் பாதுகாப்புச் செயலாளருடன் இரு தடவைகள் சந்தித்துப் பேசியுள்ளார்.

எனினும், அந்த பேச்சுக்கள் திருப்தியளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுனமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவவை தெரிவித்த அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மக்களுக்குச் சாதகமான பதில் தரப்படவில்லை. இந்த மக்களது வாழ்விடங்கள் மக்களிடமே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தித் தாம் மீண்டும் முயற்சித்து வருகின்றோம்.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேப்பாப்புலவு மக்கள் தாம் காலம் காலமாக வாழ்ந்து வந்த தமது பூர்வீகமான வாழ்விடங்களில் மீண்டும் குடியேறி வாழ்வதற்காகவே போராடி வருகின்றார்கள்.

இந்த மக்களின் போராட்டம் நியாயமானது மக்களுக்கான நிலங்கள் மக்களிடம் விரைவில் கையளிக்கப்பட வேண்டும்.

இந்த மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படாது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால், இந்தப் போராட்டம் இன்னுமின்னும் முனைப்புப் பெற்று போராட்ட வடிவங்கள் மாறவேண்டிய நிலைமைகள் ஏற்படக்கூடிய தன்மைகளே அதிகம் காணப்படுகின்றன.

மேலும், யுத்தம் முடிந்த நிலையிலும் மக்களது காணிகளை தொடர்ந்தும் இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்குமானால் மக்களது காணிகள் மக்களிடம் வழங்கப்படும் வரை மக்களுக்காகத் தொடர்ந்தும் நாம் மக்களுடன் கூட இருந்து போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.