கல்வியை வளர்க்க அனைவரும் ஒன்றுபட்டால் பல மாற்றங்களை உருவாக்கலாம்: சிறீதரன்

160

கல்வியை வளர்ப்பதற்கு நாங்கள் கூட்டாக செயல்படுவோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தால் கல்வியின் மாற்றங்களை நோக்கி நாங்கள் நகரலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி ஓய்வுநிலை பெற்றுச் சென்ற பாலேந்திரா இராஜேஸ்ரியை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களை நேசிக்கின்ற பண்பும் அவர்களை அரவணைக்கும் திறமையும் திருமதி பாலேந்திரா இராஜேஸ்ரியிடம் என்றுமே உள்ளது. இவர் தன்னுடைய சேவைக்காலத்தில் பல்வேறு பட்ட அர்ப்பணிப்புக்களைசெய்து மாவட்டத்தின் கல்வி நிலையினை வளர்த்த பெருமைக்குரியவர்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வருடங்களாக 2015ஆம் ஆண்டு வரைக்கும், அதிபர்கள்,ஆசிரியர்கள் அரசியல் பழிவாங்கல்கள் உட்படுத்தப்பட்டார்கள். பல பாடசாலை நிகழ்வுகளை நிகழ்வுகளில் என்னை அழைத்ததற்கு அந்த நிகழ்வுகளை நிறுத்தினார்கள்.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரைக்குமான காலப்பகுதியில் ஒரு அராஜக ஆட்சி இங்கு காணப்பட்டது.

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரைக்கும் ஒரு நேர்மையான ஒரு ஜனநாயக வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன.

இந்த காலப்பகுதியில் கிளிநொச்சியில் கல்விக்காக பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது மாணவர்களை தொழில்நுட்ப ரீதியாக வளர்க்கும் நோக்கில் திறன் விருத்தி வகுப்பறைகள் விளையாட்டு பூங்காக்கள் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன.

இதற்கு நாங்கள் காரணமாக இருந்து இருக்கின்றோம் கல்வியை வளர்ப்பதற்கு அரசியல்வாதிகள் ஈடுபடுவதை விட அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் அதில் முக்கிய பங்கு இருக்கின்றது.

மேற்படி நிகழ்வில் அதிபர்கள் கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் கல்வி கிளிநொச்சி மாவட்டத்தினுடைய கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில் கல்வி பின்னடைந்திருக்கின்றது. இதனை உயர்த்துவதற்கு நாங்கள் என்ன செய்யலாம் இங்கே இருக்கின்ற ஒரு கல்விச் சிந்தனையாளர் வட்டத்தினால் மட்டும் தான் இதை செய்ய முடியுமா? இது தொடர்பாக வேறு யாரும் சிந்திக்க மாட்டார்களா? ஆசிரியர்கள் சிந்திக்க மாட்டார்களா? கல்வியை வளர்ப்பதற்கு நாங்கள் கூட்டாக செயல்படுவோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்தால் கல்வியின் மாற்றங்களை நோக்கி நாங்கள் நகரலாம் என்று கூறியுள்ளார்.

முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தில் வித்தியாலய முதல்வர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடக்கு மாகாண கல்வியமைச்சர் த. குருகுலராஜா, ஓய்வு நிலையை கோட்டக்கல்வி அதிகாரி வீ.இராஜகுலசிங்கம் மற்றும் ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆரம்ப வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள். மாணவர்கள். நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.