ஆட்சியை தக்கவைக்க சிங்கள தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுக்கின்றனர்! சிறீதரன் எம்.பி

214

ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் சிங்கள அரசியல் தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அக்கராயன் கிழக்கு மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ள தற்போதைய அரசும், இப்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் மிகப் பாரிய அளவில் இனவாதத்தை கக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் சிங்கள மக்களிடம் அதிகளவில் யார் இனவாதக் கருத்துக்களை விதைக்கிறார்களோ? அவர்கள் தான் ஆட்சியை பிடிக்கமுடியும் என நம்புகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் அண்மையில் தெரிவித்த கருத்தும், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயன் கம்மன்பில ஆகியோரின் கருத்துக்களும் இதை புலப்படுத்துகிறது.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு தான் வாக்களித்தார்கள் என்பதை அவர் மறந்து செயற்படுகிறார்கள்.

தமிழர்களே இந்த மண்ணினுடைய பூர்வீகக் குடிகள். விஜயன் வருகையின் பின்னரே இலங்கையில் சிங்களவர்கள் வருகை தந்தனர் என்பது வரலாற்று உண்மை.

சிங்கள தலைவர்கள் விட்ட வரலாற்று தவறுகளே எமது அப்போதைய இளைஞர்களை ஆயுதங்களை ஏந்த வைத்தது. இந்த வரலாற்று தவறுகளை சிங்கள தலைவர்கள் தொடர்ந்தும் விடாமல் இருக்க வேண்டும்.

அத்துடன் சிங்கள மக்களுக்கு உண்மை நிலைகளை சிங்கள தலைவர்கள் கூறி அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.