துரித மனிதாபிமான சேவைகளுக்காக வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கோரிக்கை விடுத்த சிறீதரன்!

80

கொரோனா வைரஸ் தொற்று என்னும் பேரிடர் நிலையால் நாடுபூராகவும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கான அவசர உதவிகளை உள்ளூராட்சி மன்றங்கள், சமூகமட்ட அமைப்புக்களிடமுள்ள நிலையான வைப்பு நிதிகளையும், ஏனைய வருமான மூலங்ளையும் பயன்படுத்தி வழங்குவதற்கு அனுமதியளிக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

சர்வதேச ரீதியில், பெரும்பாலான நாடுகளை நிலைகுலையச் செய்துள்ள கொரோனா வைரஸ் தொற்று என்னும் பேரிடரிலிருந்து வடக்கு மாகாண மக்களை பாதுகாப்பதற்காக தாங்கள் எடுத்துவருகின்ற கரிசனையும், நடவடிக்கைகளும் பாராட்டத்தக்கவை. இத்தகைய இடர்களை களைகின்ற நடவடிக்கை களின் போது பின்வரும் விடயங்களிலும் தங்களின் விசேட கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

1) வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பெரும்பாலான பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் என்பவை மிக அதிகளவிலான நிலையான வைப்பு நிதிகளையும், ஏனைய மூலதன மற்றும் ஆதனவரி வருமானங் களையும் கொண்டுள்ளன. அத்தகைய உள்ளூராட்சி சபைகள் தற்போது மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இத்தொற்று நோய்ப் பேரிடர் காரணமாக நாடெங்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் தமது வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள், விசேட தேவையுடையோர், சிரேஸ்ட பிரஜைகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்பன தமது அன்றாட உணவுத்தேவையை நிறைவு செய்ய உதவிபுரியுமாறு மேற்படி சபைகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கோரிவருகின்றனர். இது தொடர்பில் கௌரவ சபைகள் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ள போதிலும், அதனை உள்ளூராட்சி மன்றங்களின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. எனவே இவ்விடயம் தொடர்பில் பேரிடர் கால நிலவரத்திற்கேற்ற அவசர தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

2) மேலே குறிப்பிடப்பட்டது போலவே கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள் உள்ளிட்ட சமூகமட்ட அமைப்புக்களிலும் இத்தகு நிதிகள் வைப்பிலுள்ள போதும் உணவுக்காக அல்லல்ப்படுகின்ற தமது பிரதேச மக்களுக்கு தங்களால் உதவ முடியாத நிலை காணப்படுவதாக மேற்படி அமைப்புக்களின் நிர்வாகத்தினர் எனக்கு தெரியப் படுத்தியுள்ளனர். இது தொடர்பிலும் தங்களுடைய விசேட கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

3) சமுர்த்திப் பயனாளிகளுக்கு 10,000 ரூபா கடன் முற்பணம் வழங்கப்படுவதாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும் குறித்த முற்பணத்தை பெற்றக் கொள்வதாயின் ஏற்கனவே சமுர்த்தி வங்கிக்கடனை பெற்றிருக்க கூடாது எனவும், புதிதாக சமுர்த்திப் பயனாளிகளாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு இம்முற்பணக் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் தொடர்புடைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சமுர்த்திப் பயனாளிகள் இச்சலுகையிலிருந்து புறந்தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பேரிடரினால் எமது மக்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதாரத் தாங்கங்களை கருத்திற்கொண்டு அனைத்து சமுர்த்திப் பயனாளிகளுக்கும் குறித்த முற்பணம் வழங்கப்படுவதற்கு தாங்கள் ஆவன செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.