மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும்: சி.சிறீதரன் கோரிக்கை!

33

மக்கள் அனைவரும் சமூகப் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இந்த உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தாவடி பகுதியில் ஒரு நோயாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் கிட்டத்தட்ட 1700 பேரை தனிமைப்படுத்தியிருக்கிறது.

இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் வைத்தியர்களுடனான சந்திப்பின்போது வைத்தியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படியே விட்டால் இரண்டு நாட்களில் இருபது பேரை தாக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள். உலகின் பெரிய நாடுகளே அச்சத்தில் உறைந்திருக்க தமிழர்களாகிய நாமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்.

4 இலட்சத்திற்கும் மேலான மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளை 70 ஆயிரம் மக்கள் இருப்பதாகக் கூறி அனுப்பப்பட்ட பொருட்களையே பகிர்ந்துண்டு உயிரைக்காத்தவர்கள் நாங்கள்.

அதைப்போன்று இருப்பவற்றைக்கொண்டு இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து பட்டினியில் இருந்தும் கொடூர நோயிலிருந்தும் எம்மை நாமே சுயமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.