பெண்களின் வீரத்தை உலகுக்கே உணர்த்திய உன்னத தலைவர் வே.பிரபாகரன்!

பெண்களின் விடுதலை, பெண்களின் தலைமைத்துவம், பெண்களின் ஒழுக்கம், பெண்களின் பண்பாடு, பெண்களின் மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக அரங்கில் பறைசாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவர் எமது தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதே உலகறிந்த உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவரின் வழிநடத்தலின் கீழ் வழிவந்தவர்கள் நாங்கள் என பெருமையுடன் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய பெண்கள் எழுச்சி நாள் கிளிநொச்சி நகர் பசுமைப்பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பெண்களின் உரிமைகள் தொடர்பில் பெண்களுக்கான அடிப்படை மனிதாபிமானங்கள், அடிப்படைச் சட்டங்கள் பல்வேறுபட்ட நியாயாதிக்கங்கள் என்பன கொண்டுவரப்பட்டுத்தான் உலகத்திலே இன்று பெண்கள் தங்களுடைய உரிமைகளை உணருகின்றவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள்.

கனடாவில் தற்போதுள்ள பிரதமர், தான் பதவியேற்றவுடன், அமைச்சரவையிலே பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கினார். நாங்கள் பெண் தலைமைத்துவம் பற்றிப் பேசுகின்றோம்.

ஆனால் பல நாடுகளில் தலைமைத்துவம் ஏற்ற பெண்கள் அடுத்த பெண் தலைமைத்துவத்தை வழிநடத்திச் சென்றதாக வரலாறு இல்லை.

உலகத்திலேயே முதல் பெண் பிரதமரைத் தந்த நாடு இலங்கை. உலகத்திலேயே முதல் பெண் ஜனாதிபதியைத் தந்த நாடு இலங்கை என்றெல்லாம் பலவாறாக வரலாறு பேசப்படுகின்றது.

இரும்புச் சீமாட்டி இந்திரா காந்தியைப் பற்றிப் பேசுகின்றோம், மாக்கிறட் மைக்கலைப் பற்றிப் பேசுகின்றோம் இவ்வாறாகப் பலர் இருந்த காலங்கள் எல்லாம் போய் இவ்வாறு பல பெண்கள் உலகத் தலைவர்களாக இருந்துள்ளார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் அப்பால் இந்தியாவின் பம்பாய் நகரிலே அன்னை திரேசா அம்மையார் தன்னுடைய கைகளால் பிச்சையேந்தி, ஏழைகளுக்காகவும் நொந்து போனவர்களுக்காகவும், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி தாய் என்ற அந்தஸ்த்தில் உயர்ந்து நிற்கின்றார்.

அதனால்தான் அன்னை என்ற உயரிய அந்தஸ்து அவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. எங்களுடைய தாயக மண்ணில் கூட நாங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெரிய பங்கை வகித்தவர்கள்.

ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும்தான் போரியலோடு சாதனை படைத்த காலத்தில், பெண்களும் சுதந்திரப் பறவைகள் என்ற பெயரோடு ஈழ வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்கள்.

லெப்ரினன் மாலதி மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தோடு இடம்பெற்ற யுத்தத்தில் முதலில் களப்பலியான பெண் மாவீரர்.

அதேபோன்று எமது இன விடுதலைக்காக முதல் பெண்கரும்புலியாக வீரகாவியம் படைத்தவர் அங்கயற்கண்ணி. அன்னை பூபதி அம்மையார், இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில், சத்தியத்தின் வழியில் நின்று உலகத்துக்கே அஹிம்சையைப் போதித்தார்.

எமது மண்ணின், ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றிலே பல மாற்றங்களைத் தந்தவர்களாக, விடுதலைப்புலிகளின் பெண் போராளிகள் விளங்குகின்றார்கள். விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் படைத் தளபதிகளான கேணல் விதுசா, கேணல் துர்க்கா போன்றவர்களின் வீர வரலாற்றை நாம் மறந்து விடமுடியாது.

எங்களுடைய வரலாறு வித்தியாசமானது. அந்த வரலாறுகளை எல்லாம் கடந்துதான் இந்த மண்ணிலே 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போராட்டத்திற்குப் பிற்பாடு, 2009 இல் இருந்து இன்றுவரை 10 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம்.

இன்று நாம் ஒரு சமூக விடுதலை இல்லாத, பெண் விடுதலை இல்லாத ஒரு கட்டத்துக்குள் நின்று நாங்கள் உரிமை பற்றிப் பேச வேண்டியவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றோம்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் வழங்கத் தவறியிருந்தால் இவ்வாறான ஒரு மகளிர் தினம் கொண்டாட முடிந்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.

பிரதேச சபைத் தேர்தலிலே, கிளிநொச்சி பிரமந்தனாறில் நாம் ஒரு பெண்ணைத் தேர்தலில் நிறுத்தியபோது வடக்கு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரின் கட்சியினர் அந்தப் பெண்ணின் சாதியைக் கூறி இவருக்கா வாக்களிக்கப்போகின்றீர்கள்? என்று வீடு வீடாகச் சென்று கேட்டார்கள்.

இன்றைக்கு அவர்கள் பெண் விடுதலையைப் பற்றிப் பேசுகின்றமைதான் விசித்திரமாக உள்ளது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்றாலும் சரி, மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி அனைத்திலும் 50 வீதம் பெண்களாக இருக்கவேண்டும் என்று நாம் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், பெண்களுக்குரிய அந்தஸ்தையும், சம உரிமையையும் சரியான முறையில் வழங்கியிருந்தார்.

உலக அரங்கிலே ஒழுக்கம் கூடிய, கட்டுப்பாடு கூடிய படையணிகளுள் சோதியா படையணி, மாலதி படையணி என்று போரியல் வரலாற்றில் வீரம் செறிந்த தீரம்மிக்க பெண்கள் படையணிகளை உருவாக்கித் தந்த பெருமை எமது தேசியத் தலைவர் பிரபாகரனையே சாரும்.

அவ்வாறு ஓர் உன்னதமான தலைமைக்குக் கீழே வழிகாட்டப்பட்டவர்கள் நாங்கள். அந்த வழிப்படுத்தலிலே வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply