தேசிய அணியில் இடம்பிடித்த சாதனை மாணவிகள்

கடந்த மாதம் இந்தியாவின் – திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆசிய மட்ட உருள் பந்து போட்டிகளில் இலங்கை அணி சார்பில் கலந்துகொண்ட கிளிநொச்சி மாணவிகள் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளனர்.

கிளிநொச்சி – உருத்திரபுர பகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவிகளான நடராசா வினுசா, தினகராஜா சோபிகா ஆகியோரே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த இரு மாணவிகளும் ஆசிய மட்ட போட்டிகளில் கலந்துகொள்வதற்கு எவரும் உதவ முன்வரவில்லை எனவும், அவர்களின் வெற்றிக்குப் பின்னரே அனைவராலும் கொண்டாடப்படுகிறார்கள் எனவும் அண்மையில் இணையத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்குப்புறம்பானது என குறித்த மாணவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தாம் ஆசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்குரிய போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட தேவைகளுக்காக நிதியுதவியினைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவரது காரியாலத்தில் நேரடியாக சந்தித்து கேட்டுக்கொண்டதற்கமைவாக உடனடியாகவே இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபா வீதம் பணமாக வழங்கி தம்மை வாழ்த்தி வழியனுப்பியிருந்ததோடு, தொடர் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு உருள் பந்து மைதானத்தை அமைத்துக்கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் சில ஊடகங்கள் தமது சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் உண்மைக்கு புறம்பானதும், உறுதிப்படுத்தப்படாததுமான தகவல்களை வெளியிடுவது மன வருத்தமளிக்கிறது என குறித்த மாணவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.