பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

24

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கட்டணங்கள் செலுத்தாமல் ஆணைக்குழுவினால் பறிக்கப்படும் அபாயத்தில் இருந்த காணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் காப்பாற்றியுள்ளதுடன், இன்றைய தினம் அவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரத்தினையும் வழங்கி வைத்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி அரசர்கேணி கிராம அலுவலர் பிரிவில் உள்ள செந்தில் நகர் கிராமத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியில் 43 குடும்பங்கள் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் 1987ஆம் ஆண்டில் இருந்து ஆணைக்குழுவிற்கு பணம் செலுத்தவில்லை இதனால் அவர்களின் காணிகள் பறிக்கப்படும் நிலையில் இருந்தது.

இவ்விடயத்தை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளர் ஆகியோர் கொண்டு வந்ததை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு காணி ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டிய 2 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன் உபதவிசாளர் மு.கயன் பிரதேச சபையின் உறுப்பினர்களான த.றமேஸ், வே.கோகுல்ராஜ், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், கிராம அலுவலர் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.