வாசிப்பு சுதந்திரம் மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து மாபெரும் போராட்டம்!

தமது நூலகத்தையும் மைதானத்தையும் மீட்பதற்காக கிளிநொச்சி மாவட்ட மக்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர மத்தியில் இடம்பெற்றுள்ளது.

இழந்து விட்ட தமது நூலகத்தையும் மைதானத்தையும் மீற்கும் நோக்கில் கல்வியியலாளர்கள், வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரப்பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் பயன்தரக்கூடியதும் அனைவருக்கும் அவசியமானதுமான பொது நூலக காணியினையும், பொது விளையாட்டு மைதானத்தினையும் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்றுவரை இராணுவத்தினரும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சும் கையகப்படுத்தி வைத்துள்ளனர் என அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நூலகத்திற்கென ஒதுக்கப்பட்ட காணியில் இராணுவ முகாம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது விளையாட்டு மைதான காணியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச விளையாட்டு அரங்கு ஒன்றினை நிர்மாணிக்கின்றோம் என, பிரதேச சபையின் அனுமதி இல்லாமல் அக்காணியை கையகப்படுத்தி எந்தவிதமான ஆக்கபூர்வமான வேலைகளும் அக்காணியில் செய்யப்படாமல் உள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நூலக கட்டுமானங்களுக்காக பல திட்டங்கள் வந்தபோதும் காணி விடுவிப்பு சம்மந்தமான இராணுவத்தினரின் அசமந்தப்போக்கினால் அனைத்து திட்டங்களும் தடைப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு சம்மந்தமாக ஜனாதிபதி, பிரதம மந்திரி, பாதுகாப்பு அமைச்சு, அனைத்தும் பெயரளவில் இணங்கியுள்ள போதும் இன்றுவரை ஆக்கபூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக தமது மண்ணின் இளைஞர்களின் விளையாட்டு உரிமையும் எம் மக்களின் வாசிப்புரிமையும் மறுக்கப்பட்டிருக்கிறது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.