பூநகரி பகுதிக்கு உதவிய கனடாவின் மனித நேயம்!

கடந்த கால கொடிய யுத்தங்களாலும் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்கள் அமைதியான சூழலில் நிம்மதியாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டின் வாழவைப்போம் அமைப்பின் உதவியுடன் பூநகரி நெற்பிலவு கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதாந்த உதவு தொகை வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பூநகரி நெற்பிலவு பொது நோக்கு மண்டபத்தில் பூநகரிப் பிரதேச சபை உறுப்பினர் வி.ஜெயகாந்தன் தலைமையில் அண்மையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த அமைப்பு பூநகரி பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் பல உதவிகளை செய்துவருகின்றது

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,

மீள முடியாத யுத்த அழிவுகளையும் அதன் தாக்கங்களையும் நேரடியாக அனுபவித்த நாம் இப்போதுதான் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்றோம்.

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் சிதைத்தழிக்கப்பட்ட நிலையில் கடந்த காலங்களில் இராணுவ அச்சுறுத்தல்களுக்குள்ளும் அடாவடிகளுக்குள்ளும் இருந்து விடுபடுவதற்காக பெரும்பாடுபட்டுள்ளோம்.

எமது மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்குக் கைகொடுத்து உதவி வரும் எமது உறவுகளான புலம் பெயர் தேசத்து மக்களின் உதவிகள் பெரிதாகவே மதிக்கப்படுகின்றன. அவர்களது இவ்வுதவிகள் எமது மக்களில் பலருக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளன.

அந்த வகையில் இன்றைய தினம் பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் அவர்களது ஒழுங்கமைப்பில் வாழவைப்போம் அமைப்பின் ஊடாக பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கான மாதாந்த ஊக்குவிப்பாக வழங்கப்படும் இவ்வுதவித் திட்டமும் இம்மாணவர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதே உண்மை.

யுத்த வடுக்களோடும் அழிவுகளின் அடையாளங்களோடும் அல்லல்படும் எமது இனம் சகல உரிமைகளையும் பெற்று தலை நிமிர்ந்து வாழ வேண்டும் எமது பேரவா.

எமது தாயகப் பகுதிகளில் எமது மக்களும் தமக்குரிய உரிமைகளுடன் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணித்த எமது விடுதலை வீரர்களின் கனவும் அதுவாகவே காணப்படுகின்றது.

எமது மக்களின் அர்ப்பணிப்புக்களும் எமது மாவீரர்களின் தியாகங்களும் ஒருபோதும் வீண்போகாது. நிச்சயமாக அவர்களின் கனவுகள் ஒருநாள் நனவாகும் அதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.