தமிழர் தேசம் என்பதால் அடிப்படை வசதிகள்கூட இன்னும் இல்லை! பூநகரியில் சிறீதரன் எம்.பி!

தமிழ் மக்களது வாழ்விடங்களாகக் காணப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்களில் வாழ்கின்ற பெருமளவான தமிழ் மக்கள் போக்குவரத்துச் செய்வதற்கு ஒரு வீதிகூட புனரமைக்கப்படாத நிலையில் அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக தற்போதும் அவல வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றார்கள்.
பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட வலைப்பாடு, கிராஞ்சி, பாலாவி போன்ற கிராமங்கள் இலங்கை அரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில்தான் இருக்கின்றதா என எண்ணத் தோன்றுமளவுக்கு அங்கு வாழும் தமிழ் மக்கள் போக்குவரத்துச் செய்யும் பிரதான வீதி நீண்டகாலமாகத் திருத்தியமைக்கப்படாத நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுவதுடன் இது மக்கள் போக்குவரத்துச் செய்யும் வீதிதானா? இப்பகுதிக்கப்பால் மக்கள் வசிக்கின்றார்களா? எனச் சந்தேகிக்குமளவுக்கு மிகமோசமாகக் காணப்படுகின்றது. மழை காலங்களில் கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற பகுதிகள் நிலத்தொடர்பற்ற தீவு போலக் காட்சியளிக்கின்றது. மழை காலங்களில் இவ்வீதியால் இங்கு வாழும் தமிழ் மக்கள் போக்குவரத்துச் செய்யும் நிலையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை என்றால் காலங்காலமாக அவலங்களை அனுபவிப்பவர்களுக்கு எப்படியிருக்கும்?
இப்பகுதிக்கான வீதிகளை விரைவாகத் திருத்தியமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பாராளுமன்றத்தில் நேரடியாகவும், கடித மூலமாகவும் உரிய பொறுப்புவாய்ந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் மாவட்ட, பிரதேச அபிவிருத்தி, ஒருங்கிணைப்புக் கூட்டங்களினூடாகவும் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போதிலும் பொறுப்பு வாய்ந்தவர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறப்பட்டு காலங்கடத்தப்பட்டு வருகின்றதே தவிர இவ்வீதியைத் திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகள் எவையுமே இதுவரை இடம்பெறவில்லை. இதேவேளை இந்த நாட்டின் அரசிலுள்ள அமைச்சர்கள், உயர் மட்டத்தினர் விஜயம் செய்யவுள்ள இடங்கள் என இனங்காணப்பட்டால் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரவு பகலாக தொடர்புடைய அதிகாரிகளின் திட்டமிடல்களின் அடிப்படையில் அரச பணியாளர்கள் மூலம் திருத்தியமைக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நாட்டின் அரசு மக்களுக்கான அரசா? அல்லது மக்கள் நலன்களைப் புறந்தள்ளி மக்கள் துன்பத்தில் சுகபோகம் அனுபவிக்கும் அரசா? என்ற கேள்வி எழுகின்றது.
கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற மக்கள் வாழ்விடங்களுக்கு நேற்றைய தினம் நேரடியாகச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அம்மக்களுடன் கலந்துரையாடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்படி கருத்தினையும் கூறியிருந்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்ட வகையில், அபிவிருத்தியில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படும் கிராஞ்சி, வலைப்பாடு, பாலாவி போன்ற கிராமங்கள் தமிழ் மக்கள் காலங்காலமாக வாழ்ந்த தமிழர் தேசமாகக் காணப்படுகின்றன. தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யாது மக்களை அவலத்திற்குள்ளாக்குவதன் மூலம் மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டு குடிபெயர்ந்து செல்ல வைப்பதும் ஏதிலிகளாக அலைய வைப்பதும் இறுதியில் தமிழர் தாயகப் பகுதிகளை அபகரிப்பது போன்ற நீண்ட காலத் திட்டங்கள் இதற்குள் மறைந்துள்ளன.
நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளற்ற வகையில் அவலப்படுவதை உரிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள், உயரதிகாரிகள் என அனைவருக்கும் நேரடியாகவும் கடித மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் இத்தனை வருடங்களாகிவிட்ட நிலையிலும் இப்பகுதிகளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் இருக்கின்றார்கள் என்பதிலிருந்தே இவர்களது மறைமுகத் திட்டங்கள் வெளிப்படுகின்றன.
தமிழர் தாயகப்பகுதிகள் அபிவிருத்தியில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் செயற்பாடுகளுக்கு இங்குள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் சிலரது பொறுப்பற்ற செயல்களும் துணைபுரியவதாகவே அமைந்து காணப்படுகின்றன.
எமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக உங்களுடன் இணைந்து நாம் எம்மாலான அனைத்துச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குத் தயாராகவே உள்ளோம். பூநாகரிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இப்பகுதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் இங்குள்ள மக்களும் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் போன்று வாழவேண்டும் என்பதில் நாம் உறுதியோடு செயற்பட்டு வருகின்றோம் என்றார்.