தாயகத்தில் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படும் முன்னாள் போராளிகள்

முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுவதுடன், அச்சுறுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை அவரது அலுவலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்திருந்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு சரியான நீதி வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் யுத்தம் நிறைவு பெற்று நல்லாட்சியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இதுவரை விடுவிக்கப்படாது இருக்கின்றது. இதனால் அந்த மக்கள் அகதிகளாக வாழ்கின்றார்கள்.

இரணைதீவில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த மக்களை அங்கு வாழ விடாது, அவர்களை தொழில் செய்யவிடாது அந்த தீவை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றார்கள். இதேபோல் பெருமளவான வளங்கள் இன்றும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன.

எனவே இவை விடுவிக்கப்பட வேண்டும். மேலும், நாட்டைப் பிரிக்க வேண்டுமென்று எங்களுடைய மக்கள் யாரும் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அரசாங்கமானது பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் இனரீதியான குரோதத்தை ஏற்படுத்துவதாக மக்கள் கருதுகின்றார்கள்.

முன்னாள் போராளிகள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றார்கள், இவையெல்லாம் ஒரு நல்லிணக்கத்திற்கான அறிகுறியென தெரியவில்லை.

காணாமல் போனவர்களுக்கு கண்டறியவும் அவர்களுக்கு நீதி கிடைக்கவும், நிலங்களை விடுவிப்பதற்கும் பிரிட்டிஸ் அரசாங்கம் இலங்கையின் மீது அழுத்தங்களைக் கொடுக்கவேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்.

அத்துடன், தொடர்ந்தும் வெடிபொருட்களை அகற்றி மக்கள் மீள்குடியேறுவதற்கு மேலும் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய உயரஸ்தானிகர் தெரிவிக்கையில்,

கடந்த 2004ஆம் ஆண்டில் இப்பகுதியில் தான் கடமையாற்றியதாகவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவும் என கூறியுள்ளார்.

அத்துடன், 2020ஆம் ஆண்டளவில் காணாமல் ஆக்கப்பட்ட விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அதேவேளை இலங்கையில் வாழ்கின்ற மூவின மக்களும் சம அந்தஸ்துடன் வாழ்கின்ற உரிமையை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Leave a Reply