sridaran1-720x480

படையினர் உறுதியளித்த வகையில் ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை

படையினர் உறுதியளித்தவாறு ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படைத் தளபதிகளுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த சித்திரை மாதம் 18ஆம் திகதி காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது குறித்து இதன்போது முக்கியமாகப் பேசப்பட்டது.

படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களுடைய காணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தந்த மாவட்ட செயலகங்கள் ஊடாகவும், நேரடியாகவும் தகவல்களைச் சேகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின்னர், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் அரசாங்க அதிபர், படைத் தளபதிகளுடனான சந்திப்பு ஒன்று மீண்டும் கடந்த சித்திரை மாதம் 21ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போதே கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள 1515.07 ஏக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவதற்கு படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த சித்திரை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

படையினர் உறுதியளித்தவாறு ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை.

கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சி பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

ஆனால் அது கிளிநொச்சி மாவட்டத்திற்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் சேரும். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டறிந்தேன்.

காணி விடுவிப்புக்கான எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவர்கள் கூறினார்கள் என தெரிவித்தார்.




Leave a Reply