கிளிநொச்சியில் நில உரிமம் கோரி போராட்டம் மேற்கொள்ளும் பகுதிக்கு சிறீதரன் எம்.பி விஜயம்

கிளிநொச்சி பன்னங்கண்டி ஜொனிகுடியிருப்பில் உள்ள 16 குடும்பங்களுக்கு அவர்கள் நீண்டகாலம் குடியிருந்த காணிகளை வழங்கி அவர்களுக்கான வீட்டுத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் ஏற்கனவே இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கைக்கென வழங்கப்பட்ட தனியார் காணியில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தமக்கான காணி உரிமத்தை வழங்கி வீட்டுத்திட்டங்களை பெற்றுத்தரக் கோரி கடந்த ஒருவார காலமாக கவணயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கரைச்சிப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் ஆகியோர் நேற்று ஜொனி குடியிருப்பு பகுதியை சென்று பார்வையிட்டதுடன் குறித்த காணிகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

இதன்போது மக்கள் தெரிவிக்கையில், போரினால் பாதிக்கப்பட்ட எங்களின் நிலையினை கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த ஜொனி மற்றும் கரிகாலன் ஆகியோர் நீண்டகாலம் காணிகள் இன்றி இருந்த எங்களுக்கு இந்த காணிகளை தந்து குடியேற்றினார்கள்.

தற்போது முப்பது வருடங்களாக இந்த காணியில் வாழ்ந்து வருகின்றோம். எனவே எங்களுக்கு இந்தக்காணிகளுக்கான உரிமங்களை தந்து வீட்டுத்திட்டங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சிப்பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் இது தொடர்பில் கலந்துரையாடியதுடன் குறித்த 16 குடும்பங்கள் குடியிருந்து வரும் காணிகளை அவர்களுக்கு வழங்கி வீட்டுத்திட்டங்களை வழங்க நடவக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மிக விரைவாக இவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கோ.நாகேஸ்வரன் இதன்போது தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் காணி உரிமம் கோரி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்பதாவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
Leave a Reply