இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளைக்குழுத் தெரிவுகள்

கிளிநொச்சி – பளைப் பிரதேசத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூலக்கிளைக் குழுத் தெரிவுகள் நேற்று(29) நடைபெற்றுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டிலான வட்டார ரீதியிலான மூலக்கிளைக்குழுத் தெரிவுகள் நடைபெற்று வருகின்றன தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், கிளிநொச்சி பளைப்பிரதேசத்திற்கு உட்பட்ட மாசார், இயக்கச்சி, புலோப்பளை, தம்பகாமம், இத்தாவில் ஆகிய பிரதேசங்களுக்கான தெரிவுகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இத்தெரிவுகளில் ஒவ்வொரு பிரதேசங்களிலிருந்தும் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 13 அங்கத்தவர்களைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில்,

உரிமைக்காக குரல் கொடுக்க கட்சியின் அங்கத்துவத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பல தியாகங்களைச் செய்திருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.

தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தந்தை செல்வாவின் காலத்தில் இருந்து மக்களால் கட்டியெழுப்பப்பட்டுள்ள இந்த கட்சியை மேலும் பலமான ஒரு கட்சியாக மாற்றமடைய செய்ய வேண்டும்.

இதில் ஒவ்வொருவரும் தமது அங்கத்துவத்தைப் பெற்று அங்கத்தவர்களாக இணைந்து கொள்வதன் மூலம் மேலும் பலமடையச்செய்யும். கடந்த காலங்களில் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன.

இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் வாக்களித்து தங்களுடைய மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளனர். எங்களது உரிமைகளுக்காக பல்வேறு தியாகங்களையும் உயிர்களையும் விலையாக கொடுத்திருக்கின்றோம்.

தொடர்ந்தும் உரிமைக்காக குரல் கொடுக்க கட்சியின் அங்கத்துவத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply