ஈழத்தமிழரின் காப்பரனான திகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல்

தாய்த் தமிழகத்தினுடைய தலைமகளாக இருந்து ஈழத்தமிழர்களின் இதயங்களில் நிறைந்து உரிமைகளுக்காக குரல் கொடுத்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் உயிர் பிரிந்த செய்தி ஈழத்தமிழர்களுக்கு தணியாத துயரத்தை தந்திருக்கிறது.

வரலாறு எங்களுக்கு தனித்துவமான பல தலைவர்களைத் தந்திருக்கிறது. அத்தகைய தலைவர்களில் ஒருவரான மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் ஆத்மா இளைப்பாறிய செய்தியால் கண்ணீர் வடிக்கின்ற ஒட்டுமொத்த தமிழ் குலத்தவரோடு நாமும் கரைந்து போகிறோம்.

அவர் வரித்துக்கொண்ட இலட்சியத்துக்காக கொண்டிருந்த உறுதிப்பாடும் அர்ப்பணிப்புக்களும் வியக்கவும் நயக்கவும் தக்கவையாகும்.

ஈழத்தமிழர்களின் ஆயுத ரீதியாலான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது மக்கள் திலகம் எம்.ஜி இராமச்சந்திரன் அவர்களின் அடிச்சுவட்டில் செல்வி ஜெயலலிதா அவர்கள் காட்டிய ஆதரவு மெச்சத்தக்கது.

ஈழத்தமிழர் மீது சிங்கள மேலாதிக்கம் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு நீதி கோரி சட்ட சபையில் குரல் எழுப்பிய அம்மாவின் காலப்பணியை வரலாறு பதிவு செய்துள்ளது. பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை அடைய வழி வேண்டும் என்று மொழிந்த அம்மாவின் ஆன்ம விருப்பம் ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக அமைந்தது.

அத்தகைய பெருந்தாயின் பிரிவு தாய்த்தமிழகத்தை மாத்திரம் அன்றி ஈழத்தமிழர்களையும் உலகுகெங்கும் பரந்து வாழும் தமிழ் குலத்தவரை அதிர்சியிலும்; ஆற்றாமையிலும் ஆழ்த்தியுள்ளது.

இலட்சிய தலைவியாக விளங்கி ஈழத்தமிழரின் காப்பரனாக அவர்களின் இதயங்களோடு இணைந்து வாழ்ந்த பெருந் தாய்க்கு ஈழத்தவர்களின் பேரஞ்சலியை சமர்ப்பிக்கிறோம். அவரது பிரிவால் துயர் நிறைந்துள்ள அ.தி.மு.க

உடன்பிறப்புக்கள், தமிழக தலைவர்கள், தமிழக உறவுகள், உலகத்தமிழ்ச் சகோதரர்கள் அனைவருடனும் எமது அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொள்கிறோம்.

‘அம்மாவின் ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தனது அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply