சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.!

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து குறித்த இருவரும் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இதனை ஒரு விபத்தாக பொலிஸார் காட்ட முனைந்திருப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது ஒரு மோசமான செயற்பாடாகும். மறுநாள் பகல் 12 மணிவரையிலும், பொலிஸார் குறித்த விடயத்தினை மறைத்துள்ளனர். பிரேத பரிசோதனைகளின் பின்னர்தான் இதனை வெளியில் சொல்ல வேண்டிய தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுலக்ஷனின் நெஞ்சில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் ஒருவரை மறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது முதுகு பகுதியிலேயே காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனினும், சுலக்ஷனின் நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுகின்றன. மேலும் சுலக்ஷனுடனிருந்த கஜனுக்கு துப்பாக்கி சூட்டு காயங்கள் ஏதும் ஏற்படாத போதிலும் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுலக்ஷன் சுடப்பட்ட போது கண்ணால் கண்ட சாட்சியமாக கஜன் இருந்தமையால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply