தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்ட அழகசங்கம் ஆற்றிய பணிகள் அளப்பரியவை

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்ட அழகசங்கம் ஆற்றிய பணிகள் அளப்பரியவை, மதிப்பிட முடியாதவை என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

அழகசங்கப் பொதுக்கூட்டம், கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மாநாட்டு மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ந.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சங்கம் எதிர்நோக்குகின்ற நடைமுறைப் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளைப் பெற்று கொடுக்கின்ற கலந்துரையாடலாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இங்கு உரை நிகழ்த்துகையில், உங்களுடைய சங்கம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்திருக்கின்றீர்கள், அவற்றிற்கான தீர்வுகளைக் காண வேண்டிய பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. இந்த சங்கம் ஒரு கூட்டுறவுசார் அமைப்பாக இருக்கிறது.

உங்களுடைய தொழிலை இங்கு இராணுவம் செய்கிறது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் பேசியிருக்கிறார்.

குறைந்த விலையில் அவர்கள் தொழிலை மேற்கொள்கிறார்கள். அதற்கு பின்னால் தீய நோக்கங்கள் மற்றும் புலனாய்வு நோக்கங்கள் இருக்கின்றது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய வாழ்வாதாரப் பாதிப்பை நீங்கள் சந்திக்கின்ற போது அவை பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுடைய சங்கத்தின் ஒற்றுமை என்றும் குலையாத வகையில் செயற்பட வேண்டும்.

ஏனெனில் சாதிய மாயையில் சிக்குண்டு தவித்த எம் இனத்தில் அதனையுடைத்து உங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவி குடிமை தொழிலை இல்லாது செய்து சமூக அந்தஸ்தை ஏற்படுத்தியவர் பிரபாகரன்.

அவரால் தான் நாங்கள் அடிமை குடிமை நிலையுடைந்து மனிதமுள்ள மனிதர்களாக உயிர்பெற்றோம். அந்த மாற்றத்திற்காக நீங்கள் களமுனைவரை சென்று உழைத்திருக்கிறீர்கள். அதற்காக உயிர்களை அர்ப்பணித்திருக்கிறீர்கள்.

அக்கராயனில் நாங்கள் குடியிருந்த போது உங்களுடைய அங்கத்தவர் ஒருவர் வீரச்சாவு அடைந்த வித்துடலை துயிலுமில்லம் எடுத்துச்செல்லப் புறப்பட்ட போது அவரது தம்பியின் வித்துடல் வீடு வந்ததை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். அத்தகைய தியாகங்களை எல்லாம் இனத்திற்கு ஆற்றிய சங்கம் உங்களுடையது.

இன்று அறிவும், உணர்வும் இணைந்து பயணிக்கின்ற அரசியல் பாதையில் நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மக்களிடம் இருக்கின்ற உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற அதேவேளை அறிவு பூர்வமான பிராந்திய உலக ஒத்திசைவுக்கேற்ப பயணிக்க வேண்டிய பொறுப்பு எங்களுடைய தலைமைக்கு இருக்கிறது.

காலத்தினைச் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய இறுதி நம்பிக்கை. அந்த நம்பிக்கை வரலாற்றில் பல தடவைகளில் தோற்று இருக்கிறது.

ஆனாலும் அரசு ஒரு நிரந்தர தீர்வினைத் தரும் என்று சர்வதேசம் சொல்லுகின்ற சந்தர்ப்பங்களையும், அவர்கள் உணரும்படியாக நாம் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றுள்ளார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர். சிறுவர் நன்னடத்தை அதிகாரி, பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரி, கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சு.சுரேன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

velakalihithan_speech001 velakalihithan_speech002 velakalihithan_speech003 velakalihithan_speech004 velakalihithan_speech005
Leave a Reply